தப்ஸீர் (அல் குர்ஆன் விளக்கவுரை) பகுதி

பதில் : ஸூறதுல் பாத்திஹாவும் அதன் விளக்கவுரையும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானிர் ரஹீம். மாலிகி யவ்மித்தீன். இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன். இஹ்தினஸ் ஸிராதல் முஸ்தகீம். (நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!). ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம் கைரில் மஃழூபி அலைஹிம் வலழ் ழால்லீன். ((அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி. (உன்) கோபத்திற்குள்ளானவர்களோ வழிதவறியவர்களோ சென்ற வழியல்ல). (பாதிஹா : 1 - 7).
விளக்கவுரை (தப்ஸீர்) :
ஸூறதுல் பாதிஹா மூலம் அல்குர்ஆன் ஆரம்பிக்கப்பட்டதால் அல் பாத்திஹா-திறவுகோள்- என்றபெயரால் இவ்வத்தியாயம் அழைக்கப்படுகிறது.
1- (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்) என்பதன் கருத்து, அல்லாஹ்வின் பெயரை கூறுவதன் மூலம் பரக்கத்தை வேண்டியவனாகவும் அவனைக்கொண்டு உதவிதேடியவனாகவும் அல்குர்ஆனை ஓத ஆரம்பிக்கிறேன்.
(அல்லாஹ்) என்பது உண்மையாக வணங்கப்படக் கூடியவன் என்பது பொருளாகும். இப்பெயர் அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரியது. அவனைத் தவிர வேறு எவறும் இப்பெயர் மூலம் அழைக்கப்படமாட்டார்கள்.
(அர்ரஹ்மான்)- (அளவற்ற அருளாளன்) என்பது விசாலமான பரந்த அருளுக்குச்சொந்தக்காரன். அவனின் அருள் எல்லாவற்றிலும் வியாபித்துக்காணப்படுகிறது.
(அர்ரஹீம்)- (நிகரற்ற அன்புடையோன்) என்பது இறைவிசுவாசிகளான முஃமின்களுக்கு விசேடமாக அருள்பாளிப்பவன் என்பதைக் குறிக்கிறது.
2- (அகிலத்தாரைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்) என்ற வசனம் அனைத்து வகையான புகழும் பாராட்டும் பரிபூரணத்தன்மையும் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே உரியன என்பதாகும்.
3- (அர்ரஹ்மானிர்ரஹீம்) "அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்" என்பது அல்லாஹ் விசாலாமான பரந்த அருளுக்குச்சொந்தக்காரன். அவனின் அருள் எல்லாவற்றிலும் வியாபித்துக்காணப்படுகிறது என்பதையும், அவன் இறைவிசுவாசிகளான முஃமின்களுக்கு விசேடமாக அருள்பாளிப்பவன் என்பதையும் காட்டுகிறது.
4- (மாலிகி யவ்மித்தீன்)- (மறுமை நாளின் அதிபதி) என்பது மறுமை நாளைக் குறிக்கிறது.
5- (இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன்)- (உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியும் தேடுகிறோம்) அதாவது, உன்னை மாத்திரமே வணங்குகிறோம். உன்னிடம் மாத்திரமே உதவியும் தேடுகிறோம் என்பதாகும்.
6- (இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம்)- (இறைவா எங்களுக்கு நேரான வழியை காட்டுவாயாக) என்பதன் கருத்து: இஸ்லாம் மற்றும் நபிவழியின் பால் நேர்வழி பெருவதைக் குறிக்கும்.
7- (ஸிராதல்லதீன அன்அம்த அலைஹிம் கைரில் மஃழூபி அலைஹிம் வலல்ழால்லீன்) (நீ அருள்புரிந்தோர் வழியில்.(அது உன்) கோபத்திற்குள்ளானவர்களினதோ வழிதவறியவர்களினதோ வழி அன்று.) அல்லாஹ் அருள்புரிந்தோரின் வழி என்பது, நபிமார்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றி வாழ்ந்த நல்லடியார்கள் சென்ற பாதையாகும். மாறாக யூத கிறிஸ்தவர்கள் சென்ற பாதைகள் அல்ல என்பது இவ்வசனத்தின் கருத்தாகும்.
இவ்வத்தியாயத்தை ஓதி முடித்ததும் (ஆமீன்) என்று கூறுவது நபிவழியாகும் ஆமீன் என்பதன் பொருள் இறைவா! எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வாயாக என்பதாகும்.

பதில் : ஸூறா ஸல்ஸலாவும் அதன் விளக்கவுரையும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1- இதா zஸுல்zஸிலதில் அர்ழுzஸில் zஸாலஹா. 2- வஅக்ரஜதில் அர்ழு அஸ்காலஹா. 3- வகாலல் இன்ஸானு மாலஹா. 4. யவ்மஇஃதின் துஹத்திஸு அக்பாரஹா. 5- bபிஅன்ன ரbப்பக அவ்ஹாலஹா. 6- யவ்மஇஃதிய் யஸ்dதுருன்னாஸு அஷ்தாதல் லியுரவ் அஃமாலஹும். 7- பமய்யஃமல் மிஸ்கால ஃதர்ரதின் கய்ரன்யரஹ். 8- வமய்யஃமல் மிஸ்கால ஃதர்ரதின் ஷர்ரன்யரஹ். (ஸூறதுஸ்ஸல்ஸலா : 1-8)
விளக்கவுரை (தப்ஸீர்) :
பொருள்: (1) (பூகம்பத்திற்குட்பட்டு மிகக் கடுமையாக உலுக்கி விடப்படும் போது) அதாவது, மறுமை நாள் நிகழ்வதற்காக இந்தப் பூமி மிகக்கடுமையாக அசைக்கப்படும்போது என்பது இதன் கருத்தாகும். இவ்வுலகம் அழிக்கப்படுவதற்கு முன் மிகப்பெரும் ஒரு பூகம்பம் நிகழும் என்பதை இவ்வசனம் குறித்து நிற்கிறது.
2- (பூமி தன் சுமைகளை வெளியே தள்ளி விடும் போது,) அதாவது பூமியானது தனக்குள் புதைந்து கிடக்கும் பிரேதங்கள் மற்றும் ஏனைய பொருட்களை வெளியேற்றிவிடும்.
3- (மனிதன் இதற்கென்ன நடந்து விட்டது எனக் கூறுவான்)
அதாவது அசைவின்றி இருந்த இந்தப் பூமி ஏன் அசைந்து நிலையின்றி இருக்கிறது? இதற்கு என்ன நிகழந்து விட்டது என மனிதன் தட்டுத்தடுமாறியவனாகவும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையிலும் கூறுவான்?
4- (அந்நாளில்; அது தன் செய்திகளை வெளியிடும்). இதன் கருத்தாவது: அந்த மாபெரும் நாளில் பூமியானது தன் மீது நிகழ்ந்த நல்ல தீய காரியங்கள் குறித்த செய்திகளை அறிவிக்கும் என்பதாகும்.
5- (ஏனெனில் உமது இரட்சகன் (அவ்வாறு கூறுமாறு) அதற்கு கட்டளையிட்டுள்ளான் என்று கூறும்). ஏனெனில் அல்லாஹ் இவ்வாறு கூறுமாறு அதற்கு அறிவித்து அதற்கு கட்டளையுமிட்டுள்ளான் என்பதாகும்.
6- (அந்நாளில் மனிதர்கள் தம் செயல்களைப் பார்ப்பதற்காக கூட்டங் கூட்டங்களாகச் சிதறுண்டு செல்வர்.) பூமியானது பலமான அதிர்வுக்குள்ளாகும். அம்மாபெரும் நாளில் இவ்வுலகில் செய்த காரியங்களுக்கான முடிவைப் பார்ப்பதறக்காக குழுக்களாக விசாரணை மன்றை நோக்கிப் புறப்பட்டுச் செல்வார்கள்.
7- (எனவே எவர்அணுவளவேனும் நன்மை செய்திருப்பினும் அதனை அவர் கண்டுகொள்வார்). அதாவது யார் ஒரு சிற்றெரும்பின் அளவு நன்மையான நல்ல காரியத்தை செய்திருப்பினும் அதனை தன் முன்னால் கண்டுகொள்வார் என்பது இதன் கருத்தாகும்.
8- (எவர்அணுவளவேனும் தீமை செய்திருப்பினும் அதனை அவர் கண்டுகொள்வார்) அதாவது யார் ஒருவர் அணுவளவேனும் தீய காரியத்தை செய்திருப்பினும் அதனை தன் முன்னால் கண்டுகொள்வார் என்பது இதன் கருத்தாகும்.

பதில் : ஸூறதுல் ஆதியாத்தும் அதன் விளக்கமும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
1. வல்ஆdதியாதி ழப்ஹா 2. fபல்மூரியாதி கdத்ஹா. 3. fபல்முகீராதி ஸுbப்ஹா. 4. fபஅஸர் னபிஹீ நக்ஆ. 5. fபவஸத்ன bபிஹீ ஜம்ஆ. 6. இன்னல் இன்ஸான லிரbப் bபிஹீ லகனூத். 7. வஇன்னஹு அலா தாலிக லஷஹீத். 8. வஇன்னஹு லிஹுbப் bபில் கைரி லஷdதீத். 9. அfபலா யஃலமு இஃதா bபுஃஸிர மாfபில் குbபூர். 10. வஹூஸ்ஸில மாபிஸ்ஸு dதூர். 11. இன்ன ரbப்பஹும் bபிஹிம் யவ்மஇஃதில் லகபீர். (ஸூறதுல் ஆதியாத் 1-11).
விளக்கவுரை (தப்ஸீர்) :
1- (மூச்சுத்தினற அதி வேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக !) இந்த வசனத்தில் அல்லாஹ் மிக வேகமாக மூச்சுத்தினற ஓடும் குதிரைகள் மீது சத்தியம் செய்துள்ளான். அவ்வாறு மிக வேகமாக ஓடும் வேளையில் அது மூச்சிரைக்கும் சப்தம் கேட்கும் என்று கூறுகிறான்.
2- (தீப்பொறிகளை பறக்கச்செய்பவற்றின் மீது சத்தியமாக!) மேலும் அல்லாஹ் மிக வேகமாக ஓடும் குதிரைகள் குளம்புகளை அடித்து ஓடும் போது அதன் குளம்புகள் பாரங்கல்லின் மீது பட்டு தீப்பொறியை ஏற்படுத்தும் குதிரைகளின் மீது அல்லாஹ் சத்தியம் செய்கிறான்.
3- (அதிகாலை வேளையில் தாக்குதல் நடத்தும் குதிரைகளின் மீது சத்தியமாக) அதாவது எதிரிகளை அதிகாலையில் தாக்கும் குதிரைகளின் மீது சத்தியம் செய்கிறான்.
4- (புழுதிப் படலத்தை கிளப்பி விடுபவற்றின் மீதும் சத்தியமாக) அதாவது அக் குதிரைகள் அதன் ஓட்டத்தின் மூலம் புழுதியைக் கிளப்பி விடுகின்றன.
5- (அதன் மூலம் எதிரிப் படை நடுவில் நுழைந்து விடும் குதிரைகள் மீது சத்தியமாக!) அவைகள் எதிரிகளின் கூட்டத்தினுள் நடுவில் சென்று தாக்குதல் நடத்துகின்றன. அவ்வாறான குதிரைகள் மீது சத்தியமாக!.
6- (நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்). அதவாது உண்மையில் மனிதன் தனது இரட்சகன் விரும்புகின்றவைகளை பிறருக்கு கொடுக்காது தடுத்துக்கொண்டிருக்கின்றான் என்பதை இவ்வசனம் உணர்த்துகிறது.
7- (அதற்கு அவனே சான்றாகவும் உள்ளான்) அதாவது தன்னிடம் உள்ளவற்றை பிறருக்கு கொடுத்துதவாது தடுத்துக் கொள்ளும் இச்செயலுக்க அவனே சாட்சியாளனாக உள்ளான். இந்த விடயம் மிகத்தெளிவான விடயம் என்பதனால் அதனை ஒரு போதும் மறுக்க முடியாது.
8- (நிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளான்). அதாவது தனது செல்வத்தின் மீதான மோகமானது அவனை நல்ல காரியங்களில் செலவளிக்காது கஞ்சத்தனம் காட்டுவதற்கு காரணமாக அமைகிறது.
9- (புதைகுழிக்குள் உள்ளவை வெளியே தள்ளப்படும் போது தனது நிலை குறித்து அவன் அறிய வேண்டாமா?). அதாவது உலக வாழ்வின் மோகத்தால் தற்பெருமை கொண்ட இந்த மனிதன் விசாரணைக்காவும் கூலி வழங்குவதற்காகவும் மண்ணறைகளிலிருந்து மரணித்தோரை பூமியிலிருந்து வெளியேற்றி மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பாட்டப்படும் போது அவன் உலகில் கற்பனை செய்தது போல் நிலைமை இருக்காது)? என்பதை மனிதன் அறிந்து கொள்ள வேண்டாமா?.
10- (நெஞ்சங்களில் உள்ளவையும் வெளியாக்கப்படும்). அதாவது உள்ளங்களில் தோன்றிய எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகள் இவையல்லாத விடயங்கள் அனைத்தும் தெளிவுபடுத்தப்பட்டு எடுத்துக்காட்டப்படும் .
11- (அந்தாளில், நிச்சயமாக அவர்களது இரட்சகன் அவர்களைப்பற்றி நன்கறிந்தவனாக இருப்பான்.) இதன் கருத்தாவது : நிச்சயமாக அந்நாளில் அவர்களின் இரட்சகன் அவர்கள் பற்றி ஆழ்ந்தறிந்தவனாக இருப்பான். தனது அடியார்களின் விவகாரம் எதுவும் அவனின் அறிவிலிருந்து மறைந்து போகாது. ஆதலால் அவர்களின் செயற்பாடுகளுக்கு ஏற்ப கூலி வழங்குவான்.

பதில்: ஸூறதுல் காரிஆவும் அதன் விளக்கவுரையும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
1. அல்காரிஅஹ். 2. மல்காரிஅஹ். 3. வமா அத்ராக மல்காரிஅஹ். 4. யவ்ம யகூனுன்னாஸு கல்பராஷில் மப்ஸூஸ். 5. வதகூனுல் ஜிபாளு கல்இஹ்னில் மன்பூஷ். 6. பஅம்மா மன் ஸகுலத் மவாணுஸீனுஹு. 7. பஹுவ பீ ஈஷதிர் ராழியா. 8. வஅம்மா மன் கப்பத் மவாஸீனுஹூ. 9. பஉம்முஹூ ஹாவியா. 10. வமா அமத்ராக மாஹியஃ. 11. நாருன் ஹாமியஃ. ஸூறதுல் காரிஆஃ 1-11
விளக்கவுரை (தப்ஸீர்) :
1- (திடுக்கிடச் செய்யும் பயங்கர நிகழ்வு!) கருத்து : உள்ளங்களை திடுக்கிடச்செய்யக்கூடிய மிகவும் பயங்கரங்கள் நிறைந்த நாளை குறிக்கிறது.
2- (திடுக்கிடச் செய்யும் பயங்கர நிகழ்வு என்றால் என்ன?) கருத்து : அதாவது உள்ளங்களை திடுக்கிடச்செய்யக்கூடிய மிகவும் பயங்கரங்கள் நிறைந்த நாள் என்றால் என்ன?.
3- (அந்தப் பயங்கர நிகழ்வு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?) கருத்து: நபியே மக்களின் உள்ளங்களை திடுக்கிடச் செய்யக்கூடிய மிகவும் பயங்கரங்கள் நிறைந்த நாள் பற்றி அறிவித்தது எது?! அது தான் மறுமை நாள்,
4- (அந்நாளில், மக்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்கள் போன்று ஆகிவிடுவார்கள்). கருத்து : மக்களின் உள்ளங்களை திடுக்கிடச்செய்யும் அந்நாளில் மக்களெல்லாம அங்கும் இங்கும் சிதரிய ஈசல்கள் போன்றிருப்பார்கள்.
5- (மலைகள் கடையப்பட்ட கம்பளி போன்று ஆகிவிடும்!) கருத்து : அதாவது மலைகள் அவற்றின் மெதுவான நகர்வு மற்றும் இயக்கத்தில் கடையப்பட்ட கம்பளி போன்று மென்மையானதாக ஆகிவிடும்.
6- (யாரின் செயல்களது எடை அந்நாளில் கனத்துப் பாரமாக உள்ளதோ) . அதாவது யாரின் நன்மைகளின் எடை தீமையான காரியங்களின் எடையை விட அதிகரிக்கிறதோ
7- (அவர் திருப்திகரமான வாழ்வைப் பெறுவார்). கருத்து : அவர் சுவர்க்கத்தில் திருப்திகரமான வாழ்வை பெற்றுக்கொள்வார்.
8- (யாரின் செயல்களது எடை பாரமற்று இலேசாக இருக்குமோ) கருத்து : அதாவது எவரின் தீமையான காரியங்களின் எடை நல்லமல்களின் எடையை விட அதிகரிக்கிறதோ
9- (அவர் தங்குமிடம் 'ஹாவியா' எனும் பாதாளப் படுகுழியாகும்.) கருத்து : மறுமையில் அவரின் நிரந்தர தங்குமிடம் நரகமாகும்.
10- ( ஹாவியா எனும் அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?) கருத்து : நபியே ஹாவியா என்றால் என்ன என்பது பற்றி உமக்குத் தெரியுமா?
11- (அது கடும் சூடான நெருப்பாகும்) கருத்து : அது கடும் வெப்பம் கொண்ட நரக நெருப்பாகும்.

பதில் : ஸூறதுத் தகாஸுரும் அதன் விளக்கவுரையும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1- அல்ஹாகு முத்தகாஸுர். 2- ஹத்தா ஸுர்துமுல் மகாபிர். 3- கல்லா ஸவ்ப தஃலமூன். 4- ஸும்ம கல்லா ஸவ்ப தஃலமூன். 5- கல்லா லவ் தஃலமூன இல்மல் யகீன். 6- லதரவுன்னல் ஜஹீம். 7- ஸும்ம லதரவுன்னஹா ஐனல் யகீன். 8- ஸும்ம லதுஸ்அலுன்ன யவ்மஇதின் அனின்னஈம். (ஸூறதுத் தகாஸுர் 1-8).
விளக்கவுரை (தப்ஸீர்) :
(1) (அதிகமதிகம் பொருள் சேர்த்துக் குவிக்க வேண்டும் என்ற பேராசை உங்களின் கவனத்தை திருப்பிவிட்டது). விளக்கம்: மனிதர்களே !! செல்வத்தின் மூலமும் பிள்ளைகள் மூலமும் பெருமையடிப்பது அல்லாஹ்விற்கு கீழ்படிந்து நடப்பதை விட்டும் உங்களை திசை திருப்பிவிட்டது.
(2) (நீங்கள் மண்ணரைகளைச் சந்திக்கும் வரை) விளக்கம் : நீங்கள் மரணித்து மண்ணரைகளுக்கு செல்லும் வரையில் இது உங்கள் கவனத்தை திருப்பிக்கொண்டிருக்கும்.
(3) (அவ்வாறன்று. இதன் (விளைவை) நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்வீர்கள்! ) விளக்கம் : இவ்வாறு பெருமையடிப்பது அல்லாஹ்வுக்கு கீழ்படிந்து நடப்பதை விட்டும் உங்களை திசைதிருப்பி விடுவதன் விளைவை நீங்கள் மறுமையில் நன்கறிந்து கொள்வீர்கள்!.
(4) (பின்பும் அவ்வாறன்று. இதன் (விளைவை) நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்வீர்கள்!) விளக்கம் : அதாவது இதன் விளைவை உண்மையாக அறிந்து கொள்வீர்கள்.
(5) (அவ்வாறன்று! நீங்கள் இதனை (விளைவை) உறுதியாக அறிந்திருந்தால் (உங்களை அது பராக்காக்கியிருக்காது)). விளக்கம் : அதாவது நீங்கள் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு உங்களின் செயல்களுக்கான கூலியும் உங்களுக்கு கிடைக்கும் என்று உறுதியாக அறிவீர்களாயின் செல்வங்கள் மற்றும் பிள்ளைகளின் மூலம் பெருமையடிக்கும் விடயங்களில் மூழ்கியிருக்கமாட்டீர்கள்.
(6) (நிச்சயம் நீங்கள் நரகத்தைக் காண்பீர்கள்!) விளக்கம் : அதாவது நீங்கள் மறுமையில் நரகத்தை நேரடியாகப் பார்ப்பீர்கள்.
(7) (பின்பும் அதை நீங்கள் மிக உறுதியாகக் காண்பீர்கள்!) விளக்கம் : அதாவது நீங்கள் எவ்வித சந்தேகமும் இல்லாமல் உறுதியாக அந்நரகத்தைப் பார்ப்பீர்கள்.
(8) (பின்னர் நீங்கள், அருட்கொடைகள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள்!) விளக்கம் : பின்பு அந்த நாளில் அல்லாஹ் உங்களுக்கு அருளாகத்தந்த ஆரோக்கியம், செல்வம் போன்ற அனைத்தைப் பற்றியும் உங்களிடம் விசாரிப்பான்.

பதில் : ஸூறதுல் அஸ்ரும் அதன் விளக்கவுரையும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
1- வல் அஸ்ர். 2- இன்னல் இன்ஸான லபீ குஸ்ர். 3- இல்லல்லதீன ஆமனூ வஅமிலுஸ் ஸாலிஹாதி வதவாஸவ் பில்ஹக்கி வதவாஸவ் பிஸ்ஸப்ர். (ஸூறதுல் அஸ்ர்: 1-3).
விளக்கவுரை (தப்ஸீர்) :
1- (காலத்தின் மீது சத்தியமாக!) விளக்கம் : அல்லாஹ் இவ்வசனத்தில் காலத்தின் மீது சத்தியம் செய்கிறான்.
2- (நிச்சயமாக மனிதன் நஷ்டத்திலேயே இருக்கிறான்!) விளக்கம் : அதாவது, மனிதர்கள் யாவரும் குறையிலும் நஷ்டத்திலும் உள்ளனர்.
3- (நம்பிக்கை கொண்டு, நற்கருமங்கள் புரிந்து, சத்தியத்தையும், பொறுமையையும் தம்மிடையே உபதேசித்துக் கொண்டிருப்போரைத் தவிர). விளக்கம் : அதாவது யார் ஈமான் கொண்டு நற்கருமங்கள் புரிந்து சத்தியத்தின் பால் ஏனையோரை அழைத்து அதில் எதிர்நோக்கும் சிரமங்களை பொறுமையுடன் ஏற்று வாழ்கிறார்களோ அவர்கள் இந்நஷ்டத்திலிருந்து தப்பித்துக்கொள்வார்கள்.

பதில் : ஸூறதுல் ஹுமஸாவும் அதன் விளக்கவுரையும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
1- வைலுல் லிகுல்லி ஹுமஸதில் லுமஸஹ். 2- அல்லஃதீ ஜமஅ மாலவ் வஅத்ததஹ். 3- யஹ்ஸபு அன்ன மாலஹு அக்லதஹ். 4- கல்லா லயுன் பதன்ன பில் ஹுதமஹ். 5- வமா அத்ராக மல் ஹுதமஹ். 6- நாருழ்ழாஹில் மூகதஹ். 7- அல்லதீ தத்தலிஉ அலல் அப்இதஹ். 8- இன்னஹா அலைஹிம் முஃஸதஹ். 9- ஃபீ அமதிம் முமத்ததஹ். (ஸூறதுல் ஹுமஸஃ 1-9).
விளக்கவுரை (தப்ஸீர்) :
(1) (குறை கூறி புறம் பேசித்திரியும் அனைவருக்கும் கேடு உண்டாகட்டும்!) விளக்கம் : மனிதர்கள் குறித்து புறம் பேசி குறை கூறித் திரிவோருக்கும் அழிவும் நாசமும் உண்டாகட்டும் என்று இந்த வசனம் குறிப்பிடுகிறது.
(2) (அவன் செல்வத்தைத் திரட்டி அதனைக் கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான்!) விளக்கம் : அதாவதுஅவனது கவலை செல்வத்தை சேகரிப்பதும் அதனை எண்ணி எண்ணி பாதுகாப்பதும்தான். அதனைத் தவிர வேறு கவலை அவனுக்கு இல்லை.
(3) (தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என அவன் நினைத்துக் கொண்டிருக்கின்றான்). விளக்கம் : அவன் திரட்டிய செல்வமானது மரணித்திலிருந்து தன்னை பாதுகாத்து இவ்வுலக வாழ்வில் நிரந்தரமாக வாழச் செய்யும் என எண்ணிக் கொண்டிருக்கிறான்.
(4) (அவ்வாறன்று! நிச்சயம் அவன் 'ஹுதமா' என்றழைக்கப்படும் (சிதைத்து சின்னாபின்னமாக்கும்) நரகிற்கு வீசி எறியப்படுவான்!) விளக்கம் : இது இந்த அறிவற்றவன் கற்பனை செய்வது போன்ற விவகாகரமல்ல. மாறாக இப்படிப்பட்டவர்கள் நரக நெருப்பில் வீசி எறியப்படுவார்கள். அந்நரகத்திற்கு, அதனுள் போடப்படுகின்ற அனைத்தையும் சிதைத்து துகல்களாக மாற்றிவிடும் வல்லமை உண்டு.
(5) (ஹுதமா என்றால் என்ன என்பது பற்றி உமக்குத் தெரியுமா?) இதன் கருத்தாவது : நபியே வீசி எறியப்படுகின்ற அனைத்தையும் சின்னாபின்னமாக்கிவிடும் இந்நரகத்தைப்பற்றி உமக்குத் தெரியுமா? என்பதாகும்.
(6) (அது மூட்டிவிடப்பட்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.)
(7) (அது இதயங்கள் வரை சென்று பரவும்!) விளக்கம் : அதாவது அந்த நெருப்பானது மனிதர்களின் மேனி முதல் இதயங்கள் வரை சென்று பாயக்கூடிய நெருப்பாகும்.
(8) (நிச்சயமாக அதனால் அவர்கள் சூழப்பட்டு மூடப்படுவார்கள்.) கருத்து : அதாவது அந்த நெருப்பானது வேதனை செய்யப்படுவோரின் மீது முழுமையாக மூடப்பட்டு விடும்.
(9) (அவர்கள் உயரமான தூண்களில் கட்டப்பட்டிருப்பர்) அதாவது அவர்கள் வெளிவரவே முடியாத வகையில் நீண்ட மிக உயராமான தூண்களில் கட்டப்பட்டிருப்பர் என்பது இதன் கருத்தாகும்.

பதில்: ஸூறதுல் பீலும் அதற்கான தப்ஸீர் விளக்கமும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
(1) அலம் தர கைப பஅல ரப்புக பிஅஸ்ஹாபில் பீல். (2) அலம் யஜ்அல் கைதஹும் பீ தழ்லீல். (3) வஅர்ஸல அலைஹிம் தய்ரன் அபாபீல். (4) தர்மீஹிம் பிஹிஜாரதின் மின் ஸிஜ்ஜீல். (5) பஜஅலஹும் கஅஸ்பிம் மஃகூல். (ஸூறதுல் பீல் 1-5) (யானை).
விளக்கவுரை (தப்ஸீர்) :
(1) (உமது இரட்சகன் யானைப்படையினரை என்ன செய்தான் என்பதனை நீர் பார்க்க வில்லையா?) கருத்து : நபியே உமது இரட்சகன் கஃபாவை இடிக்க நாடி படைதிரட்டி வந்த அப்ரஹாவிற்கும் அவனின் பட்டாளமான யானைப் படையினருக்கும் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?
(2) (அவர்களது சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிடவில்லையா?) விளக்கம் : அதனை இடிப்பதற்கான அவர்களின் தீய சூழ்ச்சியை அல்லாஹ் தோல்வியடையச் செய்தான். அதனால் கஅபாவை விட்டும் மக்களைத் திருப்பிவிட வேண்டும் என்ற அவர்களின் ஆசை நிறைவேறவில்லை. அதில் எதனையும் அவர்களால் செய்ய முடியவில்லை.
(3) (அவர்கள் மீது கூட்டங் கூட்டமாகப் பறவைகளை அனுப்பினான்). அதாவது, அவர்கள் மீது அல்லாஹ் பறவைகளை அனுப்பினான். அவை கூட்டங் கூட்டமாக அவர்களை நோக்கி வந்தன.
(4) அவை அவர்கள் மீது சுட்ட களிமண் கற்களை எறிந்து கொண்டிருந்தன.
(5) (அதனால் மெல்லப்பட்ட வைக்கோலைப் போன்று அவன் அவர்களை ஆக்கிவிட்டான்) விளக்கம் : அதனால் மிருகங்கள் மென்று கால்களால் மிதித்து நாசப்படுத்திய வைக்கோல் போன்று அவர்களை ஆக்கிவிட்டான்.

பதில் : ஸூறதுல் குறைஷும் அதற்கான தப்ஸீர் விளக்கமும்?
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
(1) லிஈலாபி குறைஷ். (2) ஈலாபிஹிம் ரிஹ்லதஷ் ஷிதாஇ வஸ்ஸைப். (3) பல்யஃபுதூ ரப்பஹாதல் பைத். (4) அல்லதீ அத்அமஹும் மின் ஜூஇவ் வஆமனஸஹும் மின் கவ்ப். ஸூறது குறைஷ் 1-4 (குறைஷிகள்)
விளக்கவுரை (தப்ஸீர்) :
(1) (குறைஷியர்களுக்கு விருப்பம் உண்டாக்கியமைக்காக), இதன் கருத்தாவது : அவர்கள் கோடை காலத்திலும் மாரிகாலத்திலும் பிரயாணம் செய்வதற்கான பழக்கத்தை விருப்பமாகக் கொண்டிருந்தனர்.
(2) (மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக). விளக்கம் : குறைஷிகள் வியாபாரத்தை தொழிலாகக் கொண்டோர் என்ற வகையில் அவர்கள் மாரி காலத்தில் யமனுக்கும், கோடைகாலத்தில் ஷாம் பிரதேசத்திற்கும்; எவ்வித அச்சுருத்தல் ஏதுமின்றி பாதுகாப்பாக சென்று வருவார்கள்.
(3) (எனவே அவர்கள் இந்த இல்லத்தின் இரட்சகனை வணங்கி வழிபடட்டும்). விளக்கம் : அதாவது அவர்களின் இப்பிரயாணத்தை இலகுபடுத்திக் கொடுத்த, இந்த கஃபாவாகிய புனித ஆலயத்தின் இரட்சகனை மாத்திரம் எவரையும் அவனுடன் இணைவைக்காது வணங்கட்டும்.
(4) (அவனே அவர்களுக்கு பசியின் போது உணவளித்தான், அச்சத்தின் போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கினான்). கருத்து : கஃபாவையும் அதை அண்டி வாழ்வோரையும் மதித்தல் என்ற எண்ணத்தை அறபுகளின் உள்ளத்தில் ஏற்படுத்தியதன் விளைவாக அவர்களுக்கு பசியின் போது உணவளித்தான், அச்சத்தின் போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கினான்.

பதில் : ஸூறதுல் மாஊனும் அதன் விளக்கமும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
(1) அரஅய்தல்லதீ யுகத்திபு பித்தீன். (2) பதாலிகல்லஃதீ யதுஃஉல் யதீம். (3) வலா யஹுழ்ழு அலா தஆமில் மிஸ்கீன். (4) பவய்லுல் லில்முஸல்லீன். (5) அல்லதீன ஹும் அன் ஸலாதிஹிம் ஸாஹூன். (6) அல்லஃதீன ஹும் யுராஊன். (7) வயம்னஊனல் மாஊன். (ஸூறதுல் மாஊன் 1-7) (கைமாறாகப் பரிமாறப்படும் சிறு பொருட்கள்).
விளக்கவுரை (தப்ஸீர்) :
(1) (தீர்ப்பு நாளை பொய்பிப்பவனை நபியே நீர் பார்த்தீரா?) விளக்கம் : மறுமையில் நற்கூலி - தண்டனை கொடுக்கப்படுவதென்பதை பொய்யெனக் கூறுபவனை உனக்குத் தெரியுமா!.
(2) (அவன் தான் அநாதையை மிரட்டுகிறான்) விளக்கம் : அதாவது அநாதையின் தேவையை நிறைவேற்றாது கடுமையாக நடந்து கொள்கிறான்.
(3) (ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமாட்டான்) விளக்கம் : அவன் எளியோருக்கு உணவளிக்க தன்னையோ பிறரையோ தூண்டமாட்டான்.
(4) (தொழுகையாளிகளுக்குக் கேடே உண்டாகட்டும்). அதாவது தொழுகையாளிக்கு வேதனையும் அழிவும் உண்டாகட்டும்.
(5) (அவர்கள் தொழுகையில் அலட்சியமாக இருக்கிறார்கள்.) அதாவது தமது தொழுகையில் பராமுகமாக இருக்கிறார்கள். தொழுகையின் நேரம் முடிவடையும் வரையில் அதனைப் பொருட்படுத்தாது இருப்பார்கள்.
(6) (அவர்கள் பிறருக்குக் காட்டவே தொழுகிறார்கள்.) அதாவது, அவர்கள் தமது செயல்களை அல்லாஹ்வுக்காக தூய்மையாக நிறைவேற்றாது பிறருக்கு காண்பிக்கவே தமது தொழுகையையும் செயற்பாடுகளையும் மேற்கொள்கின்றனர்.
(7) (அவர்கள் சாதாரண சிறிய பொருட்களைக் கொடுத்துதவுவதைத் தடுக்கின்றார்கள்.) உதவுவதால் தங்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாதவற்றினாலும் கூட மற்றவர்களுக்கு உதவுவதை தடுக்கிறார்கள்.

பதில் : ஸூறதுல் கவ்ஸரும் அதன் விளக்கவுரையும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
(1) இன்னா அஃதைனாகல் கௌஸர். (2) பஸல்லி லிரப்பிக வன்ஹர். (3) இன்ன ஷானிஅக ஹுவல் அப்தர். (ஸுறதுல் கவ்ஸர் 1-3).
விளக்கவுரை (தப்ஸீர்) :
(1) (நிச்சயமாக நாம் உங்களுக்கு 'கவ்ஸர்' எனும் பெரும் செல்வத்தைத் தந்தோம்.) நபியே உமக்கு பெரும் செல்வத்தை தந்தோம். அதில் ஒன்றுதான் சுவர்க்த்தில் உள்ள கவ்ஸர் எனும் நீர்த்தடாகமாகும்.
(2) (எனவே நீர் உமது இரட்சகனுக்காகத் தொழுது பலி (குர்பானி)யும் கொடுப்பீராக.) இணைவைப்பாளர்கள் தமது சிலைகளுக்கு அறுத்துப்பலியிடுவதற்கு மாற்றமாக அல்லாஹ்வுக்கு மாத்திரம் தொழுது அறுத்துப் பலியிடுவதன் மூலம் இவ்வருளை தந்த அவனுக்கு நன்றி செலுத்துவீராக.
(3) (நிச்சயமாக உமது எதிரிதான் சந்ததியற்றவன்.) நிச்சயமாக உம்மை வெறுப்பவன்தான் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான். அவன் மறக்கப்பட்டுவிட்டான். அவன் நினைவுகூறப்பட்டாலும் தீய முறையிலேயே நினைவுகூறப்படுகிறான்.

பதில் : ஸூறதுல் காபிரூனும் அதன் விளக்கமும்:
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
(1) குல் யா அய்யுஹல் காபிரூன். (2) லா அஃபுது மாதஃபுதூன். (3) வலா அன்தும் ஆஃபிதூன மா அஃபுது. (4) வலா அன ஆஃபிதும் மா அபத்தும். (5) வலா அன்தும் ஆபிதூன மா அஃபுது. (6) லகும் தீனுகும் வலிய தீன். ஸூறதுல் காபிரூன் (1-6).
விளக்கவுரை (தப்ஸீர்) :
(1) (நபியே நீர் கூறிவிடுவீராக, ' ஓ நிராகரிப்பாளர்களே !') அதாவது : நபியே நீர் கூறுவீராக, அல்லாஹ்வை நிராகரிப்பவர்களே!
(2) (நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.) அதாவது : தற்போதும் எதிர்காலத்திலும் நீங்கள் வணங்கும் சிலைகளை நான் ஒரு போதும் வணங்கமாட்டேன்.
(3) (நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபார்களாகவும் இல்லை.) அதாவது : நான் வணங்கும் அல்லாஹ் ஒருவனை நீங்கள் வணங்குவோராக இல்லை.
(4) (நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குவனுமல்லன்.) அதாவது : நீங்கள் வணங்கும் சிலைகளை நான் வணங்கக் கூடியவன் அல்லன்.
(5) (நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோர்களாகவும் இல்லை) அதாவது : நான் வணங்கும் ஓர் இறைவனான அல்லாஹ்வை நீங்கள் வணங்குவோர்களாக இல்லை.
(6) (உங்களுக்கு உங்களுடைய மார்க்கம், எனக்கு எனது மார்க்கம்) நீங்களே உங்களுக்காக உருவாக்கிக்கொண்ட உங்கள் மார்க்கம் உங்களுக்குரியது , அல்லாஹ்வினால் எனக்கு இறக்கியருளப்பட்ட மார்க்கம் எனக்குரியது.

பதில் : ஸூறதுன்னஸ்ரும் அதன் விளக்கவுரையும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
(1) இதா ஜாஅ நஸ்ருல்லாஹி வல்பத்ஹ். (2) வரஅய்தன்னாஸ யத்குலூன பீ தீனில்லாஹி அப்வாஜா. (3) பஸப்பிஹ் பிஹம்தி ரப்பிக வஸ்தஃபிர்ஹு, இன்னஹூ கான தவ்வாபா. ஸூறதுன்னஸ்ர் (1-3).
விளக்கவுரை (தப்ஸீர்) :
(1) (அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து விடும்போது,) அதாவது : நபியே! உமது மார்க்கத்திற்கான உதவியும்,அதற்கான உயர்வும், கண்ணியமும் கிடைத்து, மக்கா வெற்றி நிகழும் போது,
(2) (அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டங் கூட்டமாக நுழைவதையும் நீர் கண்டால்,) கூட்டம் கூட்டமாக இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைவதை நீர் கண்டால்,
(3) (உமது இரட்சகனைப் புகழ்ந்து அவனைத் துதிப்பீராக! அவனிடம் பாவமன்னிப்புக் கேட்பீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப்பை மிகவும் ஏற்கக் கூடியவனாக உள்ளான்.) இதன் கருத்து : இவ்வாறு நிகழ்வது நீர் எப்பணியை நிறைவேற்றுவதற்காக அனுப்பப்பட்டீரோ அப்பணியானது நிறைவுக்கு வந்துவிட்டது என்பதற்கான அறிகுறியாகும் என்பதை அறிந்து கொள்வீராக. எனவே அல்லாஹ்வின் உதவி மற்றும் வெற்றி எனும் அருள் கிடைத்தமைக்கு நன்றி செலுத்தும் முகமாக உனது இரட்சகனை புகழ்ந்து துதிசெய்வீராக. மேலும் அவனிடம் மன்னிப்பும் கோருவீராக. ஏனெனில் அவன் அடியார்களின் தவ்பாவை பாவமன்னிப்பை ஏற்று அவர்களுக்கு மன்னிப்பளிப்பவனாகவும் உள்ளான்.

பதில் : ஸூறதுல் மஸதும் அதன் விளக்கவுரையும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
(1) தப்பத் யதா அபீ லஹபிவ் வதப். (2) மா அஃனா அன்ஹு மாலுஹு வமா கஸப். (3) ஸயஸ்லா நாரன் தாத லஹப். (4) வம்ரஅதுஹூ ஹம்மாலதல் ஹதப். (5) பீ ஜீதிஹா ஹப்லும் மிம் மஸத். (ஸுறதுல் மஸத் : 1-5).
விளக்கவுரை (தப்ஸீர்) :
(1) (அபூ லஹபின் இரு கைகளும் நாசமடையட்டும்; அவனும்
அழியட்டும்)
நபி (ஸல்) அவர்களின் பெரியதந்தையான அபூலஹபின் இரு கரங்களும் அவனின் தீய செயலின் காரணத்தினால் நாசமாகட்டும். ஏனெனில் அவன் நபி (ஸல்) அவர்களை துன்புறுத்திக் கொண்டிருந்தான். இறுதியில் அவனின் முயற்சி பயனற்று தோற்றுப்போனது.
(2) (அவனது செல்வமோ, அவன் சம்பாதித்தவையோ அவனுக்குப் பயனளிக்கவில்லை.) அதாவது, அவனது செல்வமும் பிள்ளைகளும் அவனுக்கு என்ன பயனை கொடுத்தது? அவைகள் அவனுக்கு கிடைத்த தண்டனையை விட்டும் பாதுகாக்கவுமில்லை, அவனுக்கு எந்த அருளையும் பெற்றுக்கொடுக்கவுமில்லை.
(3) (விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நரகில் நுழைந்து விடுவான்.) அதாவது, மறுமையில் அவன் தீச்சுவாலையுடய நரகத்தில் நுழைந்து அதன் வெப்பத்தை வேதனையோடு அனுபவிப்பான்.
(4) (விறகு சுமக்கும் அவனுடைய மனைவியும் கொழுந்து விட்டெரியும் நரகில் நுழைந்துவிடுவாள்) அதாவது, நபியவர்கள் செல்லும் பாதையில் முற்களை போட்டு நபியவர்ளுக்கு தொல்லை கொடுத்து நோவினை செய்த அபூலஹபின் மனைவி உம்மு ஜமீலும் நரகினுள் நுழைவாள்.
(5) (அவளது கழுத்தில் நன்கு முறுக்கப்பட்ட ஈச்சம் கயிறு இருக்கும்.) அதாவது, அவளின் கழுத்தில் மிக இறுக்கமாக கட்டப்பட்ட கயிறு இருக்கும், அக்கயிற்றின் மூலமே நரகத்திற்கு அவள் இழுத்துச் செல்லப்படுவாள்.

பதில் : ஸூறதுல் இக்லாஸும்; அதன் விளக்கவுரையும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
(1) குல் ஹுவல்லாஹு அஹத். (2) அல்லாஹுஸ்ஸமத். (3) லம் யலித், வலம் யூலத். (4) வலம் யகுல்லஹு குபுவன் அஹத். (ஸூறதுல் இக்லாஸ் : 1-4)
விளக்கவுரை (தப்ஸீர்) :
(1) (நபியே அவன் அல்லாஹ் ஒருவன்தான் எனக் கூறுவீராக!) கருத்து: அதாவது நபியே! அல்லாஹ் ஒருவன், அவனைத்தவிர உண்மையான கடவுள் வேறு யாருமில்லை.
(2) (அல்லாஹ் எவ்வித தேவையுமற்றவன்) அதாவது, படைப்புகளின் தேவைகள் அவனை நோக்கியே உயர்த்தப்படுகின்றன.
(3) (அவன் யாரையும் பெறவுமில்லை, எவருக்கும் பிறக்கவுமில்லை.) அதாவது, அவனுக்கு சந்ததியோ பெற்றோரோ கிடையாது. அவன் அவை அனைத்தையும் விட்டு தூய்மையானவனாக உள்ளான்.
(4) (அவனுக்கு நிகராக யாருமில்லை). அவனின் படைப்பில் அவனுக்கு ஒப்பாக யாருமில்லை

பதில் : ஸூறதுல் பலகும் அதன் விளக்கவுரையும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
(1) குல் அஊது பிரப்பில் பலக். (2) மின் ஷர்ரி மா கலக். (3) வமின் ஷர்ரி காசிகின் இஃதா வகப். (4) வமின் ஷர்ரின் னப்பாஸாதி பில்உகத். (5) வமின் ஷர்ரி ஹாஸிதின் இஃதா ஹஸத். (ஸூறதுல் பலக் 1-5)
விளக்கவுரை (தப்ஸீர்) :
(1) (அதிகாலை நேரத்தின் இரட்சகனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்). நான் வைகரையின் இரட்சகனிடம் பாதுகாப்பும் அடைக்கலமும் தேடுகிறேன் என நபியே நீங்கள் கூறுங்கள்.
(2) (அவன் படைத்தவற்றின் தீங்குகளிலிருந்தும்; (பாதுகாப்புத்
தேடுகிறேன்)
. நோவினை செய்யும் அனைத்து படைப்பினங்களின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத்தேடுகிறேன்)
(3) (இருள் படரும் போது ஏற்படும் தீங்கை விட்டும் அவ்விரவின் தீங்கிலிருந்தும்; (பாதுகாப்புத்தேடுகிறேன்)). கருத்து : இரவில் வெளிப்படும் மிருகங்கள் மற்றும் கள்வர்களின் தொல்லைகளை விட்டும் அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுகிறேன்.
(4) (மேலும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கைவிட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்)). முடிச்சுக்களில் ஊதி சூனியம் செய்யும் பெண்களின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புத்தேடுகிறேன்.
(5) (பொறாமைக்காரன் பொறாமைப் படும் போது ஏற்படும் அவனது தீங்கிலிருந்தும் (பாதுகாப்புத்தேடுகிறேன்.) மக்களுடன் வெறுப்புக் கொண்டு அவர்களுக்கு அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள அருள்கள் அழிந்து, நோவினை செய்திட வேண்டுமென விரும்பி பொறாமை கொள்ளும் பொறாமைக்காரனின் கெடுதியை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

பதில் : ஸூறதுன்னாஸும் விளக்கவுரையும் :
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
(1) குல் அஊது பிரப்பின் னாஸ். (2) மலிகின் னாஸ். (3) இலாஹின் னாஸ். (4) மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ். (5) அல்லஃதீ யுவஸ்விஸு பீஸுதூரின் னாஸ். (6) மினல் ஜின்னதி வன்னாஸ். (ஸூறதுன்னாஸ் 1-6)
விளக்கவுரை (தப்ஸீர்) :
(1) ((நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.) நபியே நான் மனிதர்களின் இரட்சகனிடம் பாதுகாப்பும் அடைக்கலமும் தேடுகிறேன்.
(2) (மனிதர்களின் அரசனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்)) அவன் நாடியவிதத்தில் அவர்களின் விவகாரங்களை கையாள்கிறான். அவனைத் தவிர அவர்களுக்கு வேறு அரசன் யாருமில்லை.
(3) (மக்களின் உண்மையான இறைவனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்). அவன்தான் அவர்களின் உண்மையாக வணங்படக்கூடிய இறைவன், அவனைத் தவிர அவர்களுக்கு எவரும் உண்மையாக வணங்கப்படக்கூடிய இறைவன் கிடையாது.
(4) மனிதர்களுடைய உள்ளங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்தி விட்டு, மறைந்து கொள்பவனின் தீங்கைவிட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்) கருத்து : மனிதர்களின் உள்ளத்தில் வீணான சந்தேகங்களையும் ஊசலாட்டங்களையும் ஏற்படுத்தும் ஷைத்தான்களின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.
(5) (அவன் மனிதர்களின் உள்ளங்களில் சந்தேகங்களை உண்டுபன்னுகிறான்) அதாவது, மனிதர்களின் உள்ளங்களில் வீணான எண்ணங்களை அவன் ஏற்படுத்துகிறான்.
(6) (இத்தகையோர் ஜின்களிலும் மனிதர்களிலும் உள்ளனர்.) இவ்வாறு தீய எண்ணங்களை ஏற்படுத்துவோர் ஜின்களிலும் மனிதர்களிலும் உள்ளனர்.