ஹதீஸ் (நபிமொழிகள்) பகுதி
பதில் : அமீருல் முஃமினீன் அபூ ஹப்ஸ் உமர் இப்னுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை தான் கேட்டதாக அறிவிக்கிறார்கள் : செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதற்கேற்பவே கூலி கிடைக்கிறது. எவரின் ஹிஜ்ரத் ( தேசம் துறந்து செல்லல்) அல்லாஹ்வையும் அவனின் தூதரையும் நோக்காகக் கொண்டமைந்தால் அவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்கும் அவனின் திருத்தூதருக்குமானதாக அமையும். எவரின் ஹிஜ்ரத் உலக நலன்களை அடைந்து கொள்வதை நோக்காகக் கொண்டிருந்தால் அல்லது ஒரு பெண்ணை திருமணம் முடிக்கவேண்டும் என்றிருந்தால். அவரின் ஹிஜ்ரத் அதற்குரியதாகவே அமையும்'. (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
1- எல்லா அமல்களுக்கும் நிய்யத் - அவசியமாகும். தொழுகை நோன்பு ஹஜ் மற்றும் ஏனைய எல்லா வணக்களுக்கும் நிய்யத் என்பது அவசியமாகும்.
2- அல்லாஹ்வுக்காக நிய்யத் வைப்பதில் மனத்தூய்மையை கடைப்பிடிப்பது அவசியமாகும்.
நபிமொழி -2
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உம்மு அப்தில்லாஹ் உம்முல் முஃமினீன் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள் : எமது இந்த மார்க்த்தில் இல்லாத புதிய ஒரு விடயத்தை மார்க்கமாக யார் உண்டாக்குகிறானோ அவருடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்படும்'. (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
1- மார்க்கத்தில் நூதன அனுஷ்டானங்கள் - புதுமைகள் -உருவாக்கப்படுவதை தடை செய்தல்.
2- மார்க்கம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட செயல்கள் யாவும் ஏற்றுக்கொள்ளபடாது, அவைகள் நிராகரிக்கப்பட வேண்டியவைகளாகும்.
நபிமொழி -3
பதில் : உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் : (ஒருநாள் நாங்கள்; இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம். அவர்களுடன் உட்கார்ந்திருந்த வேளை மிக வெண்மையான ஆடை அணிந்த, மிகவும் கருப்பான தலைமுடியையுடைய ஒரு மனிதர் வந்தார். அவரிடம் பிரயாணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. எங்களில் எவரும் அவரை அறிந்திருக்கவுமில்லை அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அருகில் சென்று, தனது முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு சேர்த்து தனது கைகளைத் தன் தொடைகள்மீது வைத்து அமர்ந்தார். பிறகு முஹம்மதே! இஸ்லாம் என்றால் என்னவென்று எனக்குத் கற்றுத்தாருங்கள்' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள், 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படக் கூடிய இறைவன் வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் நீர்; சாட்சி கூறுவதாகும். மேலும்,தொழுகையைக் கடை பிடிப்பதும், ஸகாத்தை வழங்கி வருவதும்,ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், உங்களால் முடிந்தால் இறைவன் இல்லத்திற்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதும்' என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் 'நீங்கள் உண்மை (சரியாகவே) சொன்னீர்கள்' என்றார். அவரே கேள்வியும் கேட்டு அதற்குரிய பதில் சரியானது என்று கூறியதினால் நாங்கள் வியப்படைந்தோம்.
அடுத்து அவர், 'ஈமான் பற்றி எனக்குத் கற்றுத்தாருங்கள் என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குகளாகிய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்.மேலும் நன்மை, தீமை அனைத்தும் இறை விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்' என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் நீங்கள் உண்மை (சரியாகவே) சொன்னீர்கள் என்றார். அதனைத் தொடர்ந்து அம்மனிதர், இஹ்ஸான் என்றால் என்ன என்பது பற்றி எனக்குத் தெரிவியுங்கள் (கற்றுத்தாருங்கள்) என்றார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், '(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை நீங்கள் பார்க்கா விட்டாலும் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனை பார்க்கவில்லையாயினும், அவன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்' என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் ‘எனக்கு நியாயத் தீர்ப்பு நாள் குறித்துச் சொல்லுங்கள்’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இந்தக் கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர்” என்றார்கள்.
பின்னர் அவர், அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள் சொன்னதாவது, 'அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். மேலும் காலணிகளில்லாத, முறையான ஆடைகளற்ற, வறியவர்களான ஆடுமேய்ப்போர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள்’.
பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள், 'உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்” என்றேன் நான். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்” என்று கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்.)
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படுகின்ற சில பயன்கள் :
1-இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைக் கடமைகள் குறிப்பிடப்பட்டுள்ளமை. அவைகளாவன :
"உண்மையாக வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் கூறுதல்".
தொழுகையைக் கடைப்பிடிப்பிடித்தல் (நிலைநாட்டுதல்),
ஸகாத்தை தகுதியானோருக்கு கொடுத்தல்
ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றல்,
புனித ஹஜ் கடமையை இறைஆலயத்திற்குச் சென்று நிறைவேற்றுதல்.
2- ஈமானின் அடிப்படை அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளமை. அவை 6 ஆகும்.
அல்லாஹ்வை நம்புவதல்.
அவனுடைய மலக்குகளாகிய வானவர்களை நம்புதல்.
அவனுடைய வேதங்களை நம்புதல்.
அவனுடைய தூதர்களை நம்புதல்.
இறுதி நாளை நம்புதல்.
நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றன என்று நம்புதல்.
3-இஹ்ஸானின் அடிப்படை குறிப்பிடப்படப்பட்டிருத்தல். இஹ்ஸானின் அடிப்படை ஒன்றாகும். அதாவது அல்லாஹ்வை நீ பார்ப்பது போன்ற உள்ளுணர்வுடன் வணங்குவதாகும். நீ அவனைக் காணாவிட்டாலும் அவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
4- மறுமை நாள் ஏற்படும் நேரம் குறித்து அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள்.
நபிமொழி -4
பதில் : நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : முஃமின்களில் ஈமானில் பூரணத்துவம் அடைந்தோர் யாரெனில் அவர்களில் மிக அழகிய நற்குணத்தை உடையவர் ஆவார்'. (ஆதாரம் : திர்மிதி, இந்த ஹதீஸ் குறித்து இமாம் திர்மிதி அவர்கள் ஹஸன் ஸஹீஹ் எனத் தீர்ப்பளித்துள்ளார்.)
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
1- நற்குணத்தைக் கடைபிடிக்குமாறு தூண்டுதல்.
2- ஈமானின் பரிபூரணத்துவம் நிறைவான நற்குணத்தில் உள்ளது.
3- ஈமான் (நற்குணத்தால்) அதிகரிக்கும். (துர்குணங்களால்) குறைந்து விடும்.
நபிமொழி -5
பதில் : நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் : யார் அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் அவனை நிராகரித்து விட்டார். அல்லது அவனுக்கு இணைவைத்துவிட்டார்'. (ஆதாரம் : திர்மிதி).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
1- அல்லாஹ்வைத் தவிர வேறு எவற்றிலும் சத்தியம் செய்வது கூடாது.
2- அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்வது சிறிய வகை ஷிர்க்காகும்.
நபிமொழி -6
பதில் : நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : தன் பெற்றோர், பிள்ளை மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நான் மிகவும் நேசத்துக்குரியராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது'. (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் பயன்கள் :
-அனைத்து மனிதர்களையும் விடவும் நபியவர்களை மிக அதிகமாக நேசிப்பது கட்டாயமாகும் - வாஜிபாகும்.
-இவ்வாறு நேசம் கொள்வது ஈமானின் பரிபூரணதன்மைக்கான அடையாளமாகும்.
நபிமொழி -7
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாத வரையில் உங்களில் எவரும் ஈமான் கொண்டவாரக ஆகமாட்டார்'. (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
1- நல்லவிடயங்கள் அனைத்திலும் ஒரு முஃமின் தனக்கு விரும்புபவற்றை பிற முஃமின்களுக்கும் விரும்வது அவசியமாகும்.
அவ்வாறு விரும்புவது ஈமானின் பரிபூரணதன்மைக்கான அடையாளமாகும்.
நபிமொழி -8
பதில் : நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : எனது ஆன்மா எவனின் கைவசம் உள்ளதோ அவனின் மீது ஆணையாக! ஸூறதுல் இஹ்லாஸ் அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு நிகரானது'. (ஆதாரம் : புஹாரி).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
1- இந்த ஹதீஸ் ஸூறதுல் இக்லாஸின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.
2- இந்த ஸூறாவை ஓதுவது அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு நிகரானதாகும்.
நபிமொழி -9
பதில் : நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : (லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்) என்ற வார்த்தை சுவர்கத்தின் பொக்கிசங்களின் ஒன்றாகும்'. [இதன் கருத்து : அல்லாஹ்வின் நாட்டமும் வல்லமையுமின்றி எதுவொன்றும் அசையவும் முடியாது, எதற்கும் எந்த சக்தியும் கிடையாது. (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல்பெறவோ மனிதனால் முடியாது)] (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
1- "லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்" என்ற வார்த்தையின் சிறப்பு அது சுவர்கத்தின் பொக்கிசங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளமை.
2- ஒரு அடியான் அவனது ஆற்றல் பலத்தில் நம்பிக்கை கொள்வதை விட்டு விலகி, முற்றிலும் அல்லாஹ் ஒருவனின் மீது மாத்திரமே நம்பிக்கை கொள்ளல்.
நபிமொழி -10
பதில் : நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதை தான் செவிமடுத்ததாக அன்நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : உடலில் ஒரு சதைத்துண்டு உண்டு, அது சீராகிவிட்டால் உடல் அனைத்தும் சீராகிவிடும், அது கெட்டுவிட்டால் உடல் அனைத்தும் கெட்டுவிடும். அதுதான் உள்ளமாகும்'. (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
1- உள்ளம் சீர்பெறுவதில்தான் மனிதனின் அகமும் புறமும் சீர்பெறுவது தங்கியுள்ளது.
2- மனிதனின் சீர்திருத்தம் உள்ளத்தை சீர்செய்வதில் தங்கியுள்ளதால் அதில் கூடுதல் கவனம் செலுத்துதல்.
ஹதீஸ் - 11
பதில் : நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : எவரது இறுதி வார்த்தை லாஇலாஹ இல்லல்லாஹ் என்று உள்ளதோ அவர் சுவர்க்கம் நுழைவார்'. (ஆதாரம் : அபூதாவூத்).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
1- லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையின் சிறப்பு மற்றும் இவ்வார்த்தையின் மூலம் ஒரு அடியான் சுவர்க்கம் செல்வான் என்பதும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
2- இவ்வுலகை விட்டும் பிரியும் தருவாயில் "லாஇலாஹ இல்லல்லாஹ்" என்ற வார்த்தையைக் கூறுவதன் சிறப்பு இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
ஹதீஸ் - 12
பதில் : நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : ஒரு உண்மை முஃமின் மற்றவர்களை குறைகூறபவனாகவோ சபிப்பவனாகவே மாணக்கேடான செயல்களை செய்பவனாகவோ அசிங்கமானவற்றைப் பேசுபவனாகவோ இருக்கமாட்டான்'. (ஆதாரம் : திர்மிதி).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
1- அசிங்கமான பயணற்ற அனைத்து பேச்சுகள், வார்த்தைகளையும் இந்த ஹதீத் தடை செய்கிறது.
2- இத்தீய விடயங்களை தவிர்ந்து நடப்பது ஒரு முஃமின் தனது நாவை பேணி நடப்பதன் பண்பாக கொள்ளப்படுகிறது.
ஹதீஸ் - 13
பதில் : நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஒரு முஸ்லிம் தனக்கு அவசியமல்லாதவற்றை விட்டு விடுவது இஸ்லாத்தின் சிறந்த காரியங்களில் ஒன்றாகும்'. இந்த ஹதீஸை இமாம் திர்மிதி மற்றும் ஏனையோர் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
1- உலக மற்றும் மார்க்க விவகாரகங்களில் தனக்கு அவசியமற்ற பிறர் விவகாரங்களை விட்டுவிடுதல்.
2- அவசியமல்லாதவற்றை விட்டுவிடுவது ஒரு சிறந்த முஸ்லிமுக்குரிய நிறைவான பண்பாகும்.
ஹதீஸ் - 14
நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் அருள் மறையான அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்காகும். "அலிஃப், லாம், மீம்" என்பதை ஒரு எழுத்து என்று கூறமாட்டேன். எனினும் அலிஃப் என்பது ஒரு எழுத்து, லாம் என்பது ஒரு எழுத்து ,மீம் என்பது ஒரு எழுத்து ஆகும்'. (ஆதாரம் : திர்மிதி).
இந்த ஹதீஸிலிருந்து பெறப்படும் சில பயன்கள் :
1- அல்குர்ஆனை ஓதுவதன் சிறப்பு பற்றி இந்த ஹதீஸ் எடுத்துரைக்கிறது.
2- நீர் ஓதும் ஒவ்வொரு எழுத்திற்கும் உமக்கு பல நன்மைகள் கிடைக்கிறன.